சென்னை - வேலூர் சாலையில் சென்னையில் இருந்து சுமார் 85 கி.மீ. தொலைவில் உள்ளது தாமல். இந்தத் தலத்தில், திருவடிகளில் கொலுசு அணிந்தபடி காட்சித் தருகிறார். தாமோதரப் பெருமாள். கண்ணனின் குழந்தைப் பருவச் சேட்டைகளைப் பொறுக்கமாட்டாத யசோதை, கண்ணனின் வயிற்றில் தாம்புக் கயிற்றைக் கட்டி, உரலுடன் பிணைத்துவிட்டாள். அதனால் கண்ணனின் வயிற்றில் பதிந்த வடு, கண்ணனுக்குத் தாமோதரன் என்னும் திருப்பெயர் ஏற்படக் காரணமானது. இப்படி, வயிற்றில் தாம்புக் கயிறு பிணைத்த தழும்புடன் கூடிய கண்ணனின் கோலத்தைத் தரிசிக்க விரும்பிய மகிரிஷிகளுக்காக, இங்கே கோயில் கொண்டாராம் பெருமாள். இங்கே, முற்காலத்தில் பெருமாளுக்கு ஆராதனை செய்து வந்த (மாத்வ சம்பிரதாய நடைமுறைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், உற்சவருக்கு கஸ்தூரி திலகம் அணிவிக்கப்படுகிறது. மூலவருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று மட்டும் சூர்ணத்துக்குப் பதிலாக, கஸ்தூரி திலகம் அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது.
வழிபாட்டுச் சிறப்பு: குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இந்தத் தலத்துக்கு வந்து பெருமாளைப் பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் கோயிலுக்கு வந்த பெருமாளுக்குக் கொலுசு காணிக்கை செலுத்துகிறார்கள். தனிக்கோயிலில் நாச்சியார் திருமாலழகி என்னும் திருப்பெயருடன், பெயருக்கேற்ப அழகுற திருக்காட்சி தருகிறார். பெருமாளைப் போலவே தாயாரும் பக்தர்களின் வேண்டுதல்களை உடனுக்குடன் நிறைவேற்றி அருள்புரிகிறாள். வில்வமும் புன்னையும் தலவிருட்சமாக அமைந்திருக்கும் இந்தத் தலத்தில் ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு உற்சவம் சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
எப்படிச் செல்வது? சென்னை - வேலூர் சாலையில் சென்னையில் இருந்து சுமார் 85 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.