நத்தம்: நத்தம் மற்றும் கோபால்பட்டி பகுதி கோயில்களில் திருவிழாக்கள் நடந்தன. நத்தம் அசோக் நகர் பகவதியம்மன் கோயில் திருவிழா கடந்த மே 15 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் கணபதி ஹோமத்தை தொடர்ந்து சந்தனக்கருப்புச்சாமி கோயிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் அழைத்து வந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. மே 19 அன்று அன்னதானம், விளக்கு பூஜை மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. நேற்று முன்தினம் அம்மன் குளத்தில் இருந்து பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம், சந்தனக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு வாண வேடிக்கை முழங்க அம்மன் மின்ரத்தில் நகர்வலம் சென்றார். நேற்று அரண்மனை பொங்கல், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது.
கோபால்பட்டி விழா: கோபால்பட்டியில் காளியம்மன் கோயிலில் கடந்த மே 16 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மே 19 ல் மங்கம்பட்டி விநாயகருக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு அலங்காரம் செய்து கோவிலை அடைந்தார். நேற்று பால்குடம், அக்னி சட்டி, பறவைக்காவடி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பொங்கல் வைத்து, கிடா வெட்டி அபிஷேகம் நடந்தது. இன்று அம்மன் ஊர்வலம், மஞ்சள் நீராட்டு மற்றும் பூஞ்சோலை செல்வதுடன் விழா நிறைவடைகிறது.