மயிலாடுதுறை: அய்யாவாடி கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த அய்யாவாடி கிராமத்தில், மகா பிரத்தியங்கிரா தேவி கோவில் அமைந்துள்ளது. எட்டு திசையிலும் மயானத்தால் சூழப்பட்ட இந்த கோவிலில், அமாவாசையன்று, மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் பிரசித்திப் பெற்றதாகும். வைகாசி மாத அமாவாசையான நேற்று காலை, அம்பாளை கோவில் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, யாக குண்டத்தில் மிளகாய் வற்றலை கொட்டி நிகும்பலா யாகத்தை, தண்டபாணி குருக்கள் நடத்தினார். தொடர்ந்து, மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இசை அமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.