திருப்புவனம் திருப்புவனம் அருகே புகழ் பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இக்கோயிலில் ஜூன் 4ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. கோயிலினுள் அடைக்கலம் காத்த அய்யனார் சன்னதி பணி இன்னமும் முழுமையடைய வில்லை. பத்ரகாளியம்மன் சன்னதி முன் தரைதளம் சரி செய்யப்படவில்லை. பக்தர்கள் வந்து செல்ல வசதியாக கோயிலின் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. 17 வருடங்கள் கழித்து கும்பாபிஷேகம் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் கூடுவர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, பொருட்கள் வைக்கும் அறை, அவசர காலங்களில் வெளியேறும் பகுதி உள்ளிட்ட எந்த வித வசதிகளையும் கோயில் நிர்வாகம் செய்யவில்லை. தலைமுடி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் குளிப்பதற்கு உரிய வசதிகள் இல்லை. தண்ணீர் தொட்டி பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.தற்போது கடும் கோடை வெப்பம் நிலவி வரும் வேளையில் வெப்பம் காரணமாக முதியோர், குழந்தைகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கும்பாபிஷேக பணிகள் தொடங்குவதற்குள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.