பதிவு செய்த நாள்
31
மே
2017
12:05
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சவுடேஸ்வரி கோயில் விழாவில், ஏராளமான இளைஞர்கள் கத்திபோட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சின்னாளபட்டி தென்புதுாரில் ராமலிங்க சவுடேஸ்வரி கோயிலில், ஆண்டுதோறும் கத்திபோடும் விழா நடைபெறும். இந்தாண்டுக்கான விழா, கடந்த வாரத்தில் காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. தேவாங்கர் சமுதாயத்தினர், காப்புக்கட்டி விரதமிருந்து வருகின்றனர். நேற்று அம்மன் அழைப்பு நடந்தது. முன்னதாக, அம்பாத்துறையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பாரம்பரிய வழக்கப்படி, மேலக்கோட்டை ஜமீன் அழைப்பு நடந்தது. மாக்காள நாயக்கர் மகன் துரைப்பாண்டியை, போர்பண்டை என்ற பகுதிக்கு அழைத்து வந்தனர். அங்கு, அவர் தானமாக அளித்த குதிரையை அலங்கரித்து, சுவாமி அழைப்பு துவங்கியது. கத்தியில் பூ, காதோலை கருகமணி ஆகியவற்றால் அலங்கரித்து, குதிரையில் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர். அப்போது, காப்புக்கட்டிய இளைஞர்கள் பலர், மார்பில் கத்தியிட்டபடி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலுக்குள் குதிரை அழைத்துச்செல்லப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்குப்பின் மகா தீபாராதனை நடந்தது.