பதிவு செய்த நாள்
02
ஜூன்
2017
01:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி, ஜூன் 3ல் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் தெரிவித்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வரலாறு குறித்து பக்தர்களுக்கு விளக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடக்கும். இந்த ஆண்டு ஜூன் 2ல் ஸ்ரீ ராமர், ராவணனை வதம் செய்தல், ஜூன் 3ல் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் விபீஷணருக்கு, ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடக்கும். அன்றைய தினம் காலை 3:00 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் நடைதிறந்து, 4:00 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை, கால பூஜை நடக்கும். தொடர்ந்து காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து ஸ்ரீ ராமர் புறப்பாடாகி, கோதண்டராமர் கோயிலில் எழுந்தருளியதும், கோயில் நடை சாத்தப்படும். பின்னர் மாலை 4:00 மணிக்கு கோயிலுக்கு ஸ்ரீராமர் திரும்பியதும், கோயில் நடை திறக்கப்படும். எனவே ஜூன் 3ல் கோயிலில் பக்தர்கள் புனித நீராட, பகலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. ஜூன் 4ல் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடக்கும் என கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.