பதிவு செய்த நாள்
09
ஜூன்
2017
10:06
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம், ‘கோவிந்தா... கோவிந்தா’ என்ற பக்தர்களின் கோஷங்களுக்கு மத்தியில், நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, கடந்த, 1ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில், அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று முன்தினம், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. நேற்று, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
திருத்தேரில், பூமி நீளாதேவி தாயார், கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ வீரராகவப் பெருமாள், சிவப்பு பட்டு உடுத்தி, மலர் மாலைகள் அணிந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மாலை, 4:30க்கு, ‘வெங்கட்ரமணா... கோவிந்தா...’ என்ற பக்தர்களின் கோஷங்களுக்கு மத்தியில், தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, வீதிகளில் வலம் வந்தது. தேருக்கு முன், நாதஸ்வரம், டிரம்செட் இசைக்கலைஞர்கள்,நாட்டியத்துடன் இசையால் அதிர வைத்தனர். பக்தர்களின் கோலாட்டம், கும்மியாட்டம் நடந்தது. கொங்கு பண்பாட்டு மையம், கொங்கு சலங்கை குமார் குழுவினரின் பெருஞ்சலங்கையாட்டம் மற்றும் வான வேடிக்கையுடன், கோலாகலமாக, இரவு, 7:35 மணிக்கு, தேர் நிலைக்கு வந்தது. வைகாசி விசாக தேர்த்திருவிழால், இன்று காலை சிறப்பு அபிஷேகம், இரவு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, சிறப்பு அபிஷேகம், மாலையில், தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது. வரும், 11ம் தேதி, மகா தரிசனம்; 12ம் தேதி, மஞ்சள் நீராட்டு, மலர் பல்லக்கு நடக்கிறது. வரும், 13ல், விடையாற்றி உற்சவத்துடன், தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.