பதிவு செய்த நாள்
09
ஜூன்
2017
10:06
திருப்பூர்: உலகிலேயே முதல் முறையாக, ஒரே கல்லில் பெருமாளின் 10 அவதாரங்களை அமைத்து, திருப்பூரை சேர்ந்த சிற்பிகள் சாதனை படைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில், சிற்பக்கலை தொழிலில், நுாற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். இங்கு உருவாக்கப்படும் சிலைகள், உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. பூண்டியை சேர்ந்த ஸ்தபதி கனக ரத்தினம், அவரது மகன் ராதாகிருஷ்ணன் ஆகியோர், ஒரே கல்லில் வடிவமைத்துள்ள தசாவதார பெருமாள் சிலை, அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெருமாளின், 10 அவதாரங்களையும், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், அற்புதமாக செதுக்கி அசத்திஉள்ளனர்.தாமரை பீடத்துடன், 13 அடி உயரம், 2.5 அடி சுற்றளவு, 6.5 அகலத்தில், 13 டன் எடையில், ஒரே கல்லில், சிலை உருவாக்கப்பட்டு உள்ளது.
திருப்பதியில் எழுந்தருளியுள்ள பெருமாள் பிரதானமாகவும், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனர், பரசுராமர், ஸ்ரீராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கல்கி என, 10 அவதாரங்களின் முக்கிய அம்சங்கள், சிலையில் இடம் பெற்றுள்ளன. நின்ற கோலத்தில், ஒரு சிலையில், 10 அவதாரங்களையும் காணும்போது, அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். இந்தச் சிலை, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில், கட்டப்பட்டு வரும், தசாவதார பெருமாள் கோவிலில், விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சிலையை வடிவமைத்த, ஸ்தபதி கனகரத்தினம் கூறுகையில், ”முதலில் ஓவியம் வரையப்பட்டது. தொடர்ந்து, ஆகம, சில்ப சாஸ்திர விதிப்படி, சிலை தயாரித்து, உயிரோட்டமாக அமைந்துள்ளது. சிலை வடிக்கும் பணி ஓராண்டாக நடந்து, தற்போது நிறைவு பெற்றுள்ளது,” என்றார்.