பதிவு செய்த நாள்
09
ஜூன்
2017
10:06
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது. பெருமாள் செல்லும் வழிகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வரதராஜபெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று, கருட சேவை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.முன்னதாக அதிகாலை, 2:00 மணிக்கு, பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வாகன மண்டபத்திற்கு சென்றார். மலர் அலங்காரத்தில், 3:00 முதல், 4:00 மணி வரை, பக்தர்கள், பெருமாளை தரிசித்தனர். பின், பெருமாள் கருட வாகனத்தில் ஆழ்வார் பிரகாரம் வழியாக, சுற்றி வந்து, 4:50 மணியளவில் கோபுர தரிசனம் நடைபெற்றது.சின்ன காஞ்சிபுரம் வழியாக துாப்புல் தேசிகன் சன்னதிக்கு சென்ற பெருமாளுக்கு, மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து, தாயார் குளம் வழியாக பிள்ளையார்பாளையம் சென்று, காலை, 9:00 மணியளவில் கச்ச பேஸ்வரர் கோவிலை சென்றடைந்தார்.
கோவில் முன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி, கோவிந்தா... கோவிந்தா... என, கோஷம் போட்டு வழிபட்டனர். அங்கிருந்து, 9:15 மணிக்கு புறப்பட்டு சங்கர மடம் எதிரில் உள்ள வாகன மண்டபத்தில் எழுந்தருளினார். வீதியுலா முடிந்து, பகல், 12:30 மணிக்கு, பெருமாள் கோவிலை சென்றடைந்தார். இரவு அனுமந்த வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது.
போலீசார் பாதுகாப்பு பிரசாரம்: வரதராஜப்பெருமாள் கோவில் கருட சேவையை முன்னிட்டு நேற்று, 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நகர் முக்கிய சாலை சந்திப்புகளில் ஒலிபெருக்கி மூலம் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி பிரசாரம் செய்தனர். பெண்கள் தங்கள் நகைகளை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ளும் வகையில், போலீசார் அவர்களுக்கு பாதுகாப்பு பின் வழங்கினர். இருப்பினும், ஒரு பெண், பக்தர்கள் வேசத்தில் வேறு ஒரு பெண்ணிடம் நகை பறிக்க முயன்றதாக போலீசார் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.