திருவாடானை: தமிழக மண்ணோடும், மக்களோடும் கலந்த கலைகளில் தேரோட்டமும் ஒன்று. சிறு மலைகள் போல் காட்சியளிக்கும் தேர்களை,மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இழுக்கும் போது, லேசாக ஆடி அசைந்து வரும் தேரின் அழகை காண கண் கோடி வேண்டும்.
திருவாடானையில் பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலுக்கு சொந்தமான தேரில், 200க்கும் மேற்பட்ட சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அழகிய வேலைபாடுடன் இச் சிலைகள் அமைந்துள்ளது.தேரின் மேல்பகுதியில் சுவாமிக்கு சிலைக்கு கீழ் பகுதியில் மகாத்மாகாந்தி ராட்டினத்தில் நுால் நுாற்கும் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருவாடானை முக்கிய பங்கு வகித்துள்ளது. தமிழகத்தில் தியாகிகள் அதிகமாக வாழும் ஊர்களில் திருவாடானையும் ஒன்று. ஆகவே ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் கொண்ட இப்பகுதி மக்கள், சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில் காந்தியின் உருவத்தை தேரில் அமைத்துள்ளனர். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு, தேர் அமைக்கப்பட்ட போது, இப்பகுதி பொதுமக்களின் சுதந்திர தாகம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம். தேரின் அழகை பார்க்கும் பொதுமக்கள் தேரிலுள்ள காந்தியை பார்த்து வியந்து செல்கின்றனர்.