பதிவு செய்த நாள்
10
ஜூன்
2017
11:06
படப்பை : பராமரிப்பு இன்றி அழிந்து வரும் பழமையான கோவில்களை, தொல்லியல் துறையினர் மற்றும் இந்து அறநிலையத் துறையினர் சீரமைத்து, பராமரிக்க வேண்டும். கோவில் கல்வெட்டில் உள்ள வரலாற்று தகவல்களை, ஆய்வு செய்து, வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வரலாற்று பெருமை: பராமரிப்பு இல்லாமல் அழிந்து வரும் இந்த கோவில்கள், பல நுாற்றாண்டுகளாக வரலாற்று தகவல்களை தாங்கியுள்ளன. எனவே, இந்த கோவில்கள் அவை அமைந்துள்ள ஊர்களுக்கு பெருமை சேர்க்கின்றன. ஆனால், இதன் பெருமையை உணராத அப்பகுதி மக்கள், கோவிலை சீரமைக்க எந்த வித முயற்சியையும் எடுக்காமல் உள்ளனர். தொல்லியல் துறையினர், கோவில்களில் எஞ்சி யுள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்து, வரலாற்று பெருமையை வெளிப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர்: படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி கிராமத்தில், வீமீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. முற்றிலும் சிதிலமடைந்து காணப்படும் இந்த கோவில் குறித்த வரலாறு முழுமையாக தெரியவில்லை. கோவிலை சுற்றி பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த கோவில், மாடக்கோவில் எனும் வடிவமைப்பில் உள்ளது. மாடி போல் அமைந்த இக்கோவில்கள், 7ம் நுாற்றாண்டில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது. இந்த கோவிலின், 70 சதவீத பகுதிகள் இடிந்து விழுந்த நிலையில் இருக்கின்றன. தற்போது, சிவ தொண்டர்கள் சிலர் இணைந்து, கோவிலை பராமரிக்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையினர் இந்த கோவில் வரலாற்றை ஆய்வு செய்து, கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். மேலும், தனியார் வசம் ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நிலங்களை அனுபவிக்க சீரமைக்கப்படவில்லையா?: பழமையான இந்த கோவில்களுக்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. இவை பல ஆண்டுகளாக, குத்தகைதாரர்கள் வசம் உள்ளன. குத்தகை பணமும் கோவிலுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நிலங்களை அபகரிக்க நினைப்பவர்கள், கோவிலை பராமரிக்க முயற்சி எடுப்பதில்லை என, கூறப்படுகிறது.
குன்றத்துார் திருவாலீஸ்வரர்: குன்றத்துார் முருகன் கோவில் மலை அடிவாரத்தின் கீழ் இந்த கோவில் உள்ளது. திருவாலீஸ்வரர் என அழைக்கப்படும் இந்த கோவிலின் பல பகுதி கள், இடிந்து விழுந்து சிதிலமடைந்துள்ளன. இந்த கோவிலை சுற்றி ஏராளமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோவிலை சுற்றி உள்ள இடங்கள், ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறி விட்டன. இந்த கோவிலை சீரமைத்து, வரலாற்று தகவல்களை ஆய்வு செய்ய வேண்டும் என, சிவபக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உமையாள் பரணஞ்சேரி சிவன் கோவில்: படப்பை அருகே வலையகரணை அடுத்த உமையாள் பரணஞ்சேரியில், சாலையோரம் முற்றிலும் அழிந்த நிலையில் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலின் கற்கள் அப்பகுதியில் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. எஞ்சியுள்ள இந்த கோவிலின் அடிபாகத்தில் உள்ள கற்களில் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. மிகவும் பழமையான இந்த கோவில், சிவன் கோவிலாக இருக்கலாம் என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், கோவில் பெயர் மற்றும் வரலாறு யாருக்கும் தெரியாததால், கல்வெட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அமரம்பேடு கரியமாணிக்க பெருமாள் கோவில்: குன்றத்துார் அருகே உள்ள அமரம்பேடு கிராமத்தில், கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த கோவில் எந்தவித பராமரிப்பும் இல்லாமல், சிதிலமடைந்து உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குத்தகைதாரர்களிடம் உள்ளன. குத்தகைதாரர்கள் பல ஆண்டுகளாக கோவிலுக்கு குத்தகை பணத்தை செலுத்தாமல் உள்ளதாக, அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
நாவலுார் ஏகாம்பர நாதேஸ்வரர்: படப்பை அடுத்த நாவலுார் கிராமத்தில், பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பர நாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த கோவில் முறையாக பராமரிக்கப்படாததால் கோவில் கட்டடங்கள் சிதிலம் அடைந்து வருகின்றன. கோவிலுக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலம் தனியார் நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு, கோவிலை பராமரிக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒரத்துார் அகத்தீஸ்வரர்: படப்பை அடுத்த ஒரத்துார் கிராமத்தில், அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில், கி.பி., 1539ம் ஆண்டு விஜய நகர மன்னர், அச்சுதனால் கட்டப்பட்டது என, கல்வெட்டுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமாக, 35 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. அவை, குத்தகைதாரர்கள் பிடியில் இருக்கின்றன. தற்போது இந்த கோவில், முறையான பராமரிப்பு இல்லாமல், மரம் செடிகள் முளைத்து காணப்படுகிறது. இதனால், கோவில் சுவர்கள் மற்றும் பிரகார கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குத்தகைதாரர்களிடம் இருந்து கோவில் நிலத்தை மீட்டு, கோவிலை பராமரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.