சிங்கம்புணரி, சிங்கம்புணரி அருகே நடந்த புரவி எடுப்பு திருவிழாவில் 231 புரவிகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன. சூரக்குடி கிராமம் எஸ்.கோவில்பட்டி சிறைமீட்ட அய்யனார், செகுட்டுடையனார் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 2 ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதற்காக மண்குதிரைகள் செய்ய கிராமத்தார்கள் சார்பில் மே 27 ம் தேதி பிடிமண் கொடுக்கப்பட்டது. அதைக்கொண்டு 2 அரண்மனை புரவிகளும், 231 நேர்த்திக்கடன் புரவிகளும் செய்யப்பட்டன. புரவி பொட்டலில் வைத்து செய்யப்பட்ட இப்புரவிகள் ஜூன் 8 ம் தேதி சூரக்குடி கச்சேரி திடலுக்கு கொண்டுவரப்பட்டு, சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று கச்சேரி திடலில் பாரம்பரியமான சாமியாட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து புரவி ஊர்வலம் புறப்பட்டது. அரண்மனை புரவிகளிள் ஒன்று சிறைமீட்ட அய்யனார் கோயிலுக்கு கொண்டுசெல்லப்பட்டது. மற்றொரு அரண்மனை புரவியோடு நேர்த்திகடன் புரவிகள் செகுட்டையானார் கோயிலுக்கு கொண்டுசெல்லப்பட்டது. பக்தர்கள் பக்தி கோஷத்துடன் புரவிகளை சுமந்துசென்றனர். வழி நெடுகிலும் பக்தர்கள் கூடிநின்று புரவிகளை வழிபட்டனர். விழாவையொட்டி தங்க கவச அலங்காரத்தில் செகுட்டையனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.