பிரதி வியாழக்கிழமை வேங்கடேஸ்வர ஸ்வாமிக்கு இரண்டாவது அர்ச்சனைக்குப் பிறகு நடைபெறும் நிவேதனம் திருப்பாவாடை சேவை என்றும் அன்ன கூடோத்ஸவம் என்றும் கூறுவர். வியாழக்கிழமை காலை 6 மணிக்கு எம்பெருமான் மூலமூர்த்திக்கு அணிந்துள்ள ஆபரணங்கள் அனைத்தையும் களைந்து விடுவர். பின்னர் ஊர்த்வ புண்டரத்தையும் நன்றாக குறைத்து கண்கள் நன்றாக தெரியும்படி பண்ணுவர். பின்னர் திருவேங்கடமுடையானுக்கு எதிராக தங்க வாயில் முன்பு பெரிய மலைபோன்று புளியோதரையை குவித்து வைப்பர். புளியோதரையுடன் ஜிலேபியும், முறுக்கினையும் அதில் அமர்த்தி பூவினால் அலங்கரிப்பர். இந்த புளியோதரையை நேராக கருவறையில் உள்ள எம்பெருமானுக்கு நிவேதிப்பர். இச்சேவையில் ஆர்ஜிதம் செலுத்தும் பக்தர்களும் பங்கு கொள்ளலாம். இச்சேவையின் போது வேத பண்டிதர்கள் வேத பாராயணத்துடன் ஸ்ரீநிவாசகத்யம் சேவிப்பர். அதன் பின்னர் பக்தர்களுக்கு இச்சேவையுடன் ஸ்வாமி நேத்ர தரிசனமும் உண்டு.