பதிவு செய்த நாள்
12
ஜூன்
2017
06:06
கவுசல்யா சுப்ரஜா ராம! பூர்வா சந்த்யா பரவர்த்ததே! உத்திஷ்ட நரசார்தூல! கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்!
ஆழ்வார்கள் கூற்றுப்படி வழிவழியாய் ஆட்செய்யப்பட்டு வரும் கைங்கர்யங்களில் ஒன்று எம்பெருமானை துயிலெழுப்பும் திருப்பள்ளி உணர்த்தும் சேவையே சுப்ரபாத சேவையாகும். இதுவே ஸ்ரீவேங்கடேஸ்வர சுப்ரபாதமாகும். 29 ஸ்தோத்திரங்கள் உள்ள சுப்ரபாதத்தையும், 11 ஸ்லோகங்கள் உள்ள ஸ்தோத்திரத்தையும் 16 ஸ்லோகங்கள் உள்ள ப்ரபத்தியையும் 14 ஸ்லோகங்கள் உள்ள மங்களாசாஸனத்தையும் 15 ம் நூற்றாண்டில் ஸ்ரீமணவாள மாமுனி சீடரான பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி எழுதினார். ஒவ்வொரு நாளும் பிரம்ம முகூர்த்தத்தில் திருமலை கோயிலில் திருமலையானுக்கு சுப்ரபாத சேவை நடைபெறுகிறது.
அந்த சமயத்தில் சன்னிதி இடையர், அர்ச்சக ஸ்வாமிகள், ஜீயர் ஸ்வாமிகள், கோயில் அதிகாரிகள், வேத பண்டிதர்கள், தாள்ளபாக்கத்தார், சுப்ரபாத சேவை பக்தர்கள் இவர்கள் அனைவரின் முன்னிலையில் அர்ச்சக ஸ்வாமிகள் தங்க வாயிலின் தாழ்பாளைத் திறப்பார். அதன் பின்னர் ஏகாங்கி மஹந்து மடத்தார் கொண்டு வந்த பால், சர்க்கரை, வெண்ணை தாம்பூலம் உள்ள கிண்ணத்தினை எடுத்துக் கொண்டு உள்ளே போவார். அந்த சமயத்தில் சுப்ரபாதம், தாள்ளபாக்க அன்னமய்யாவின் ஒரு திருப்பள்ளியெழுச்சி பாடுவர். ராமர் மேடைக்கு வேயப்பட்டுள்ள கதவுத்தாளினை திறந்து, சயனமண்டபத்தில் சயனித்துள்ள போக ஸ்ரீநிவாசமூர்த்தியை குலசேகரபடி அருகே நின்று, தீவெட்டி வெளிச்சத்தில் சன்னதி இடையர் முதலில் எம்பெருமானின் திவ்வியமங்கள மூர்த்தியை தரிசனம் செய்துகொண்ட பின் அர்ச்சகர் உள்ளே நுழைந்து தீபங்கள் ஏற்றி, பாத நஸ்காரம் செய்து, கைதட்டி போக ஸ்ரீனிவாசமூர்த்தியை திருப்பள்ளி எழுந்தருளும்படி பிரார்த்திப்பர். பின்னர் மஹந்து மடத்திலிருந்து கொண்டு வந்ததை நிவேதநம் செய்து சுகந்த தாம்பூலங்களை சமர்ப்பிப்பர். நவநீத ஆரத்தி வெளிச்சத்தில் சதகோடி மன்மத வடிவினனான எம்பெருமான் அனந்தகோடி திவ்ய ஒளியுடன் தரிசனமளிக்கின்றார். எம்பெருமானின் தங்கத் திருப்பாதங்களின் மீது துளசி, புஷ்பங்கள் முதலியவை இல்லாது திருப்பாதத்தை தரிசிக்கும் பாக்கியத்தை விஸ்வரூப தரிசனம் என்பர்.