பதிவு செய்த நாள்
14
ஜூன்
2017
02:06
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி, பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. சேலத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், சிதிலமடைந்து இருந்ததால் சீரமைக்க அறநிலையத்துறை, ரூ.2.80 கோடி ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தது.
அதன் பிறகு பணிகள் துவங்கியது. அப்போது கோட்டை பெரியமாரியம்மன் அறக்கட்டளை நிர்வாகி ரஜினிசெந்தில், கோவிலில் உள்ள கருவறை தனித்தன்மை வாய்ந்தது. எனவே, அதை அகற்றக்கூடாது என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோவிலில் உள்ள கருவறை மற்றும் மூலஸ்தானத்திற்கு எவ்விதமான பாதிப்பும், சேதாரமும் ஏற்படுத்த கூடாது என, உத்தரவிட்டது. அதன் பிறகு கருவறையை மட்டும் வைத்து விட்டு, வெளிபிரகாரத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். சுற்றுப்புற மண்டபம், ரூ.98 லட்சம் செலவிலும், மகாமண்டபம், ரூ.93 லட்சம் செலவிலும் புதுப்பிக்கும் பணி கடந்த ஜனவரியில் இருந்து நடந்து வந்தது. இந்நிலையில், கருவறையை இடிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சித்து வருவதாக கூறி, ரஜினி செந்தில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு, இரு மாதங்களுக்கு முன் மீண்டும் புகார் அனுப்பினார். இதனால், கட்டுமான பணி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுத்ததையடுத்து கடந்த, 11ல் கருவறையை சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு தகரத்தை, அகற்றுவதற்கு வந்த போது அறக்கட்டளை நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் திரும்பி சென்றனர். இந்நிலையில், நேற்று போலீசாரின் பாதுகாப்புடன் கருவறையை சுற்றியிருந்த இரும்பு தகடுகள் அகற்றபட்டன.
இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் மாலா கூறியதாவது: அறக்கட்டளை நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கால், அந்த கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. மேலும் கருவறை பாதுகாப்பு கருதி, இரும்பு தகடுகள் கொண்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பணிகள் துவங்கவுள்ளதால், அந்த தகடுகள் நேற்று போலீசாரின் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ரஜினிசெந்தில் கூறியதாவது: கருவறையை சுற்றி, இரும்பு தகடுகள் வைத்து அடைக்கப்பட்டிருந்ததை பார்க்கும் போது கருவறையானது, சிறையில் இருப்பது போல இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கருவறையை திறக்க வேண்டும் என, பிரார்த்தனை செய்து வந்தனர். அது தற்போது நடந்து விட்டது. அடுத்தகட்டமாக ஆடி திருவிழாவை நடத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.