பதிவு செய்த நாள்
15
ஜூன்
2017
11:06
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நெய்தீபம் ஏற்றும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து மூலவர் முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு வசதியாக மலைக்கோவிலில், கோவில் நிர்வாகம் சார்பில் நெய்தீபம் ஏற்றுவதற்கு இடவசதி மற்றும் விளக்குகளை கோவில் நிர்வாகமே, ஒரு தீபம், 5 ரூபாய் என, விற்பனை செய்கிறது. தினமும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி வழிப்படுகின்றனர். ஆறு மாதம் முன் வரை நெய்தீபம், உற்சவர் முருகப்பெருமான் சன்னதி அருகே இடம் ஒதுக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு வந்தது. தற்போது, மாடவீதியில், அகிலாண்டம் அருகில் திறந்தவெளியில், நெய்தீபம் ஏற்றும் இடம் மாற்றம் செய்யப்பட்டது. மாடவீதியில் நெய்தீபம் இருப்பதால் காற்றுக்கு பக்தர்கள் ஏற்றும் நெய்தீபம் சிறிது நேரத்தில் அணைந்து விடுகிறது. இதனால் பக்தர்கள் வேதனை அடைவதுடன், காற்றில் தீபத்தை ஏற்றுவதற்கு சிரமப்படுகின்றனர். எனவே, பக்தர்கள் நலன் கருதி, கோவில் நிர்வாகம் நெய்தீபம் ஏற்றும் இடத்தை பழைய இடத்திற்கே, அதாவது உற்சவர் சன்னதி அருகே மாற்ற வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.