பதிவு செய்த நாள்
15
ஜூன்
2017
12:06
ஆத்தூர்: முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆத்தூர், தெற்கு உடையார்பாளையம், காந்தி நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே உள்ள, முத்துமாரியம்மன் கோவிலில், 36வது ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த, 11 முதல், பல்வேறு பூஜை நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு, முத்துமாரியம்மன், விநாயகர், முருகன் சுவாமிகளுக்கு, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்தில், புனித நீர் ஊற்றி, சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அப்போது, முத்துமாரியம்மன், விநாயகர், முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், கெங்கவல்லி, நரசிங்கபுரம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். மே, 14ல் விநாயகபுரம் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, ஆறு பெண்களிடம், 42 பவுன் நகைகள் திருடுபோயின. இதனால், பெண் கொள்ளையர்களின் படங்களுடன், முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் போலீசார், நேற்று பேனர் வைத்திருந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.