பதிவு செய்த நாள்
17
நவ
2011
10:11
கும்மிடிப்பூண்டி : பல்லவர் கால கோவிலிலுள்ள ரகசிய அறையை இடித்ததில் கல், மண் குவியல் மட்டுமே இருந்தன. அவற்றை அகற்றி பார்த்ததில், ரகசிய அறை வெற்றிடமாக காட்சியளித்ததால், கூடி இருந்தவர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட தெய்வநாயகி உடனுறை சந்திரசேகரேஸ்வரர் கோவில் உள்ளது. அக்கோவிலில், வள்ளி சுப்பிரமணிய தெய்வானை சன்னிதிக்கும், அதை அடுத்துள்ள தெய்வநாயகி அம்மன் சன்னிதிக்கும் இடையே, 5 அடி அகலம், 12 அடி நீளத்தில் ரகசிய அறை இருப்பதை, இந்து அறநிலையத் துறையினர் கண்டறிந்தனர். இந்த ரகசிய அறை, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பத்மநாபன், தொல்லியல் துறை காப்பாட்சியர் சம்பத், கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராமபிரான் முன்னிலையில் இடிக்கப்பட்டது. இதற்காக, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., குமார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் வெளிப்புற பிரகாரத்திலுள்ள ரகசிய அறையின் சுவரை இடிக்க துவங்கினர். இடிக்கப்பட்ட பகுதியில், துவாரம் வழியாக ரகசிய அறை இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு ரகசிய அறை சுவரை மட்டும் இடித்தனர். ரகசிய அறையில் இருந்த கல், மண் குவியல் அகற்றப்பட்டது. வெற்றிடமாக காட்சியளித்த ரகசிய அறையில், ஏதுமில்லை என்பதை உறுதி செய்தனர். காலை முதல் கோவிலை சுற்றி ஆர்வத்துடன் காத்திருந்த அனைவரும், பெருத்த ஏமாற்றமடைந்தனர். கூடியிருந்த மக்கள் வரிசையாக நின்று, ஒவ்வொருவராக ரகசிய அறையை பார்த்தபடி சென்றனர். வெற்றிடம் ஏன்? : எதற்காக வெற்றிடமாக உள்ள ஒரு இடம், நான்கு பக்கம் அடைக்கப்பட்டது என்று, தொல்லியல் துறை காப்பாட்சியர் சம்பத்திடம் கேட்டபோது, ""ரகசிய அறையின் இடது புறத்தில், மாடம் ஒன்று இருக்கிறது. ஆரம்ப காலத்தில் அந்த அறையும் ஒரு சன்னிதியாக இருந்திருக்கக் கூடும். அந்த சன்னிதியை வேறு இடத்திற்கு மாற்றியிருக்கக் கூடும். வெற்றிடமாக ஒரு அறை இருப்பதற்கு பதிலாக, நான்கு பக்கம் சுவர் எழுப்பினால், மேல் பகுதியிலுள்ள கருங்கல் தளம், பலமாக நிற்கும் என்ற எண்ணத்தில், அந்த அறையை முழுவதும் அடைத்திருக்கக் கூடும், என்று தெரிவித்தார்.