பதிவு செய்த நாள்
21
ஜூன்
2017
12:06
நெய்வேலி: என்.எல்.சி., நிறுவனம் சார்பில் சிதம்பரம், நடராஜர் கோவிலுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் பேட்டரி வாகனம் வழங்கும் விழா நடந்தது.
சிதம்பரம், நடராஜர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் மனிதவளத்துறை இயக்குனர் விக்ரமன், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தினையும், புகை ஏற்படுத்தாத பேட்டரி மூலம் இயங்கும் வாகனத்தையும் இயக்கி வைத்து கோவில் நிர்வாகத்திடம் வழங்கி பேசுகையில், ‘என்.எல்.சி., இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வரும் சமூக மேம்பாட்டுப் பணிகளில், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. நடராஜர் கேகாவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நடக்க இயலாதவர்கள் எளிதில் கோவிலை சுற்றி வருவதற்கு வழங்கப்பட்டுள்ள இந்த வசதியை அடுத்து, கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்ட ஆழ்துளை கிணறு தோண்டும் பணி மற்றும் கோவில் குளத்தைப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார். விழாவில், என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் மோகன், பொது மேலாளர் பீட்டர் ஜேம்ஸ், உயர் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கோவில் தீட்சிதர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.