பழநி: பழநி முருகன்கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய செல்லாத பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மாற்றப்படாமல் ரூ.பல லட்சம் இருப்பு வைத்துள்ளனர். பழநி முருகன் மலைக்கோயிலுக்கு விழாக்காலங்கள் மட்டுமின்றி சாதரண நாட்களிலும் வெளிநாடு, மாநிலங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். இதனால் திருப்பதிக்கு அடுத்த படியாக பழநி கோயில் உண்டியல் மூலம் அதிக வருமானம் வருகிறது. சராசரியாக மாதந்தோறும் ரூ.1.5 கோடிவரை வசூலாகிறது. இத்தொகை கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தபின்னரும், பக்தர்கள் உண்டிலில் காணிக்கையாக பல ஆயிரங்களைச் செலுத்துகின்றனர். இதில், ஒவ்வொரு உண்டியல் எண்ணிக்கையின் போதும் ரூ.50ஆயிரம் முதல் ரூ.ஒருலட்சம் வரை பழைய செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளும் அதில் உள்ளன. அவற்றை ரிசர்வ் வங்கி அனுமதியின்றி கணக்கில் வரவுவைக்க முடியாது என வங்கிகள் கைவிரித்து விட்டன. இதனால் ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகளாக ரூ.பல லட்சங்கள் கோயிலில் இருப்பு வைக்கப் பட்டுள்ளன. இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பழநியில் மட்டுமின்றி தமிழக கோயில்கள் பலவற்றிலும் உண்டியல் மூலம் பெறும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை வங்கிகளில் மாற்ற இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் மூலம் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது” என்றார்.