பதிவு செய்த நாள்
21
ஜூன்
2017
05:06
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி நடந்த கொடியேற்ற உற்சவத்தில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி ஆனித் திருமஞ்சனம் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாரராதனைகள் நடந்தது. இதனை தொடர்ந்து நடராஜர் சன்னதி கொடிமரம் (துவாஜகம்பம்) மற்றும் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைதொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைப்பெற்று பிரகாரம் வலம் வந்து கொடிமரம் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் உற்சவ ஆச்சாரியார் ஆபத்சகாய தீட்சிதர் சிறப்பு பூஜைகள். வழிப்பாடுகள் நடத்தி காலை 6.45 மணிக்கு ஆனித்திருமஞ்சனம் உற்சவக் கொடியை ஏற்றினார். அப்போது பக்தர்கள் ‘பொன்னம்பலத்தானே’, ‘ஆடல் வல்லானே’ என கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கொடிமரத்திற்கு மகா தீபாராதனைகள் நடந்தது. இதில் கோவில் தீட்சிதர்கள், ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். உற்சவத்தை சபாநாயகர் கோவில் பொதுதீட்சிதர்கள் சார்பில் செயலாளர் ராஜகணபதி தீட்சிதர் தலைமையில் பொது தீட்சிதர்கள் செய்கின்றனர். உற்சவத்தில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு தினம் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை வழிப்பாடுகள், காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு சுவாமி அம்பாள் புறப்பாடு நடக்கிறது. வரும் 25ம் தேதி தெருவடைச்சான் சப்பரத்தேரோட்டம், 29ம் தேதி நடராஜர் தேரோட்டம், 30ம் தேதி மாலை ஆனித்திருமஞ்சன தரிசனம் நடக்கிறது.