பதிவு செய்த நாள்
17
நவ
2011
11:11
திருவள்ளூர் : சபரிமலையில், மாலை விற்று வந்த நரிக்குறவர்கள், முதல் முறையாக விரதமிருந்து, அய்யப்பனை தரிசிக்க, நேற்று மாலை அணிந்தனர். திருவள்ளூர், பெரியகுப்பம் மேம்பாலம் கீழ், 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் தங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், கடந்த, 15 ஆண்டுகளாக இங்கு தங்கி, துளசி, சந்தன மாலை, விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவைகளை தயாரித்து, ரயில்களில் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கேரள மாநிலம், சபரிமலைக்குச் சென்று, கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் துளசி, சந்தன மாலைகளை விற்பனை செய்வது வழக்கம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன், அய்யப்பனை தரிசிக்க வருவதை பார்த்து, இவர்களுக்கும் விரதமிருந்து, அய்யப்பனை தரிசிக்கும் ஆர்வம் வந்து விட்டது. இதையடுத்து, 15 நரிக்குறவர்கள் முதல் முறையாக, அய்யப்பனை விரதமிருந்து தரிசிக்க, நேற்று மாலை அணிந்தனர். கார்த்திகை இன்று பிறக்கும் நிலையில், இவர்கள் நேற்றே மாலை அணிந்து கொண்டனர்.
இது குறித்து, பூபதி என்ற நரிக்குறவர் கூறும்போது, "கடந்த, 15 ஆண்டுகளாக நாங்கள் அய்யப்பன் கோவிலுக்குச் சென்று, மாலைகளை விற்பனை செய்து வருகிறோம். இதுவரை, கோவிலுக்கு வெளியில் தான் நாங்கள் சென்றுள்ளோம். ஒருமுறை கூட அய்யப்பனை நேரில் தரிசித்ததில்லை. ஒவ்வொரு ஆண்டும், சபரி மலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் கூட்டத்தைப் பார்த்து, எங்களுக்கும் ஆர்வம் வந்து விட்டது. எனவே, இந்தாண்டு நாங்கள், கடும் விரதமிருந்து, அய்யப்பனை தரிசிக்க மாலை அணிந்து கொண்டோம். பொதுவாக, அய்யப்பன் கோவிலுக்கு முதல் முறையாக மாலை அணிந்து செல்பவர்களை, கன்னி சாமி என்று கூறுவர். அதைப் போல், கன்னிசாமியாகி நாங்களும், 48 நாட்கள் கடும் விரதமிருந்து, முறையாக பூஜை நடத்தி, அய்யப்பனை தரிசிக்க செல்வோம் என்றார்.