பதிவு செய்த நாள்
22
ஜூன்
2017
11:06
ஆர்.கே.பேட்டை : அப்பன் ஈசனுக்கும், பிள்ளை சுப்ரமணிய சுவாமிக்கும், நேற்று, கிருத்திகை மற்றும் பிரதோஷ அபிஷேகத்தையொட்டி, சிறப்பு உற்சவம் நடந்தது. வில்வம் அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
ஆனி மாதம், 7ம் தேதியான நேற்று பிரதோஷம் மற்றும் கிருத்திகை விழாக்கள், ஒரே நாளில் அமைந்தன. இதையொட்டி, சிவாலயங்களில் பிரதோஷ அபிஷேகமும், முருகர் கோவில்களில் கிருத்திகை உற்சவமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன. காலை முதல், இரவு வரை, முருகர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.மாலையில், சிவாலயங்களில், நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அபூர்வமாக ஒரே நாளில் அமைந்த இந்த உற்சவங்களால், சைவ சமய பக்தர்கள் பெரும் கொண்டாட்டத்தில் திளைத்தனர். காலை முதலே, சுவாமிக்கு தேவையான மலர்களை சேகரிப்பதும், அர்ச்சனைக்கு உகந்த வில்வம் இலைகளை பறிப்பதுமாக சுறுசுறுப்பாக காணப்பட்டனர்.இதே போல், தாமரை, அருகம்புல் உள்ளிட்டவையும் சேகரிக்கப்பட்டன. ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம், நெடியம்கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவில்களில் கிருத்திகையை ஒட்டி சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் நடந்தது. சுவாமியை தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.மாலை, 4:00 மணிக்கு, ஆர்.கே.பேட்டை வீசாலீஸ்வரர், வங்கனுார் வியாசேஸ்வரர், மட்டவளம் கோவத்ச நாதேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ அபிஷேகம் நடந்தது.