பதிவு செய்த நாள்
23
ஜூன்
2017
01:06
எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே... என்பது ஆன்றோரின் வாக்கு மட்டுமல்ல; அவர்களின் வாழ்க்கையும் கூட!
உத்தரகண்ட் மாநிலத்தில், பத்ரிநாத் எனும் இடத்திலுள்ள புகழ்பெற்ற பதரிகாசிரமத்தில், பூர்ணவித்து என்ற முனிவர், தன் மனைவி பத்திரதத்தையுடன் வாழ்ந்து வந்தார்.
குறையேதும் இல்லாத அவர்களது வாழ்வில், குழந்தை யில்லா குறை மட்டும், மனதை வாட்டியது. ஒருநாள், தன் கணவரிடம், சுவாமி... சிவபெருமான், நமக்கு வேண்டிய அளவு செல்வத்தை கொடுத்துள்ளார். ஆனால், மழலை செல்வத்தை மட்டும் அருளவில்லை. நல்ல குணம் பொருந்திய மக்கட்பேற்றை அடையா விட்டால், நற்கதியில்லை என்று மறைகள் கூறுகின்றன; ஆகையால், புத்திர பேற்றை அடைய, நாம் தவம் செய்ய வேண்டும்... என்று கூறினாள். என் மனதில் உள்ளதை சொல்லி விட்டாய்; அப்படியே செய்வோம்... என்றார், பூர்ணவித்து. இருவரும் கடுமையாக தவம் புரிய, அவர்கள் தவத்திற்கு இரங்கி, மங்களகரமான, மகவொன்று பிறக்கும்... என, அருள் புரிந்தார், சிவபெருமான். அதன்படியே, ஆண்குழந்தை ஒன்று பிறந்தது.
அக்குழந்தைக்கு, சாநந்தன் என, பெயர் சூட்டினர். சிவபக்தியில் சிறந்து விளங்கிய சாநந்தன், கல்வி கேள்விகளில் சிறந்து, அறிவில் தலைசிறந்தவனாக விளங்கினான். அவனை, சாநந்த முனிவர் என்று அழைத்தனர், முனி சிரோஷ்டர்கள். ஒருநாள், முனிவர்கள் எல்லாம் அமர்ந்து, ஞான நூல்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்க, அவ்விடத்திற்கு வந்த சாநந்தன், அவர்கள் உரையை அமைதியாக செவிமடுத்தார். பின், வீட்டிற்கு திரும்பும் போது, இறைவன், தான் படைக்கும் உயிர்களுக்கு, நல்வினை வழியாய் நன்மையையும், தீவினை வழியாய் துன்பத்தையும் கொடுப்பதன் மூலம் அவருக்கு என்ன லாபம்... அதைவிடுத்து, எல்லாருக்குமே நல்லறிவு தோன்றுமாறு செய்து, முக்தியை கொடுத்தால் என்ன... என்று சிந்தித்தவர், இது பற்றி எமதர்மனிடம் பேச வேண்டும்... என எண்ணி, சிவபெருமானை துதிக்க, அங்கே மலர் விமானம் ஒன்று வந்தது. அவ்விமானத்தில் ஏறி, எமபுரியை நோக்கி பயணப்பட்டார், சாநந்தர். இவர் பயணத்தை அறிந்த நாரதர், எமனிடம் சென்று, இவரைப் பற்றிய தகவல்களை எல்லாம் சொல்லி, எமதர்மா... சாநந்தர், தன் தவ வலிமையால், உன் எம லோகத்தையே காலியாக்கி விடுவார்; எச்சரிக்கை... எனக் கூறி, சென்றார்.
எமலோகத்திற்கு வந்த சாநந்தரை வணங்கி, வரவேற்ற எமன், அவருக்கு எமலோகம் முழுதும் சுற்றி காட்ட ஏற்பாடும் செய்தார். முதலில், நல்வினையாளர்கள் அனுபவிக்கும் இன்பங்களை பார்வையிட்ட சாநந்தர், எமலோகத்தின் தெற்கு வாயிலை அடைந்தார். அங்கிருந்த காவலர் தலைவன், முனிவர் பெருமானே... தங்களை போன்ற உத்தமர்கள், இங்குள்ள தீவினையாளர்களை பார்ப்பது, நல்லதல்ல... என்றார். அப்போது, உள்ளிருந்து, தீவினையாளர்களின் பெருத்த அலறல் ஓசை கேட்டது. அதைக் கேட்ட சாநந்தர், திறவுங்கள் இவ்வாசலை... என்று உத்தரவிட்டார். கதவுகள் திறக்கப்பட்டதும், அங்கிருந்த தீவினையாளர்கள் படும் நரக வேதனைகளை கண்டார், சாநந்தர். நரகவாசிகள் செய்த பாவங்களை விவரித்த காவலர், இவர்களுக்கு, இனி நற்கதியே கிடையாது... என்றார். மனம் வருந்திய சாநந்தர், இவர்களுக்கு நற்கதி கிடைக்க செய்யாவிட்டால், சிவத்தொண்டன் எனும் பெயர் எனக்கு ஏற்குமா... என, நினைத்து, சிவபெருமானை துதித்து, அவர்களின் செவிகளில் விழும்படி, ஐந்தெழுத்து மந்திரத்தை உரக்கச் சொன்னார். அடுத்த வினாடியில், நரகவாசிகள் தீவினை நீங்கி, கைலாயம் அடைந்தனர். சொல்பவர்க்கு மட்டுமல்லாது, கேட்பவர்களுக்கும் நன்மை அளிக்க கூடியது, நமசிவாய எனும் பஞ்சாஞ்சர மந்திரம். அதை நாமும் சொல்வோம்; தீவினைகளை வெல்வோம்!