பதிவு செய்த நாள்
26
ஜூன்
2017
01:06
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த வரட்டனப்பள்ளியில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில், மழை வேண்டி பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி அருகே உள்ள வரட்டனப்பள்ளியில், கடந்த, 20 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், கிணறுகள் வறண்டு, தண்ணீர் இல்லாததால், மரங்கள் அனைத்தும் காய்ந்து போயின. இதனால் விவசாயிகள், வேறு வேலை தேடி, அருகில் உள்ள ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்திற்கு சென்று, அங்கு கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில், மழை வேண்டி பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு பூஜை நேற்று காலை நடந்தது. அதில், மழை வேண்டி, அம்மனிடம் மடிப்பிச்சை கேட்டு பெண்கள் பிரார்த்தனை செய்தனர். அப்போது கோவில் பூசாரி, அம்மனுக்கு படைக்கப்பட்டிருந்த பொங்கல் மற்றும் பஞ்சாமிர்தத்தை மழை வேண்டி மண்டியிட்டு பிரார்த்தனை செய்த பெண்களுக்கு வழங்கினார். இதில், சுற்று வட்டாரத்தில், ஏழு கிராமங்களை சேர்ந்த, ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.