பதிவு செய்த நாள்
01
ஜூலை
2017
12:07
வில்லியனுார்: வழுதாவூரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சீதாலட்சுமண பரத சத்ருக்ன அனுமத் சமேத பட்டாபிஷேக ராமர் கோவில் மகா சம்ப்ரோஷனம் நேற்று நடந்தது. பத்துக்கண்ணு அருகே உள்ள வழுதாவூர் கலிங்கமலையில், சீதாலட்சுமண பரத சத்ருக்ன அனுமத் சமேத பட்டாபிஷேக ராமர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சம்ப்ரோஷன விழா கடந்த 28ம் தேதி ரங்கநாதப் பெருமாள் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் திருவாராதனம் சாற்றுமுறை, பகவத் அநுக்ஞை மற்றும் பாராணங்களுடன் துவங்கியது.
கடந்த 29ம் தேதி காலை 7:00 மணிக்கு நித்ய திருவாராதனம், யாகசாலை நத்ய ஹோமங்கள், 84 கலச திருமஞ்சணமும், இரவு 9 மணியளவில் திருவாராதனம் மற்றும் சாற்றுமுறை நடந்தது. முக்கிய விழாவான சம்ப்ரோஷனத்தை முன்னிட்டு காலை 5:00 மணிக்கு விஸ்வரூபம், திருவாராதனமும், அதனை தொடர்ந்து வேத பாராயணங்களுடன், காலை 9:05க்கு மேல் யாத்ராதானம் மற்றும் கடம் புறப்பாடும், காலை 9:32 மணிக்குமேல் 10:21 மணிக்குள், முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமையில், வரதராஜப் பெருமாள் கோவிலில் புதியதாக அமைந்துள்ள பெருந்தேவிதாயர், ஆண்டாள் நாச்சியார், லட்சுமி நரசிம்மன், நம்மாழ்வார், எம்பெருமகனார், மணவாள மாமுனிகளுக்கு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள ஆலயங்களுக்கு சம்ப்ரோஷணம் நடந்தது. அதனை தொடர்ந்து பட்டாபிஷேக ராமர் ஆலயத்தின் விமான கோபுரத்திற்கு சம்ரோஷணமும், மகா தீபாராதனையும் நடந்தது.