பதிவு செய்த நாள்
04
ஜூலை
2017
12:07
ஆர்.கே.பேட்டை: ஆடி, ஆவணியில் அம்மன் திருவிழா மற்றும் அதை தொடர்ந்து புரட்டாசியில் பெருமாளை அலங்கரிக்கவும், துளசியின் தேவை அதிகரிக்கும் என்பதை கணித்து, விவசாயிகள் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். தற்போதே துளசி செடிகளை பயிரிட்டு, வளர்க்க துவங்கி உள்ளனர். ஆடி, ஆவணி மாதம் என, மொத்தமாக, 10 வாரங்களுக்கு அம்மன் கோவில்களில் கொண்டாட்டம் களைகட்டும். வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் கரைபுரளும், அம்மனை அல்ஙகரிக்க பூக்களின் தேவை எந்தளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு துளசியும் பயன்படுத்தப்படுகிறது. துளசியின் தனித்துவமான மணம், ஆன்மிக உணர்வுடன் தொடர்பு உடையது என்பதால், துளசிக்கு தனி மரியாதை உண்டு.
ஆவணியை தொடர்ந்து, புரட்டாசி மாதம், பெருமாளுக்கு உகந்தது. புரட்டாசி ஐந்து சனிக்கிழமையும், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். வீடுகளிலும் தளுக்கு படைத்து பெருமாளுக்கு பூஜைகள் நடைபெறும். துளசி இல்லாமல் பெருமாள் வழிபாடு இல்லை. மாலை முதல், தீர்த்தம் வரை, துளசி பயன்பாடு ஆதிக்கம் செலுத்தும். அடுத்த மூன்று மாதங்களுக்கு, துளசியின் தேவை உள்ளது என்பதை உணர்ந்து, ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தற்போதே துளசி பயிரிட்டு வளர்த்து வருகின்றனர். கடவுள் வழிபாட்டிற்கானது என்பதால், துளசி வயலையும் விவசாயிகள் சுத்தமாக பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.