பதிவு செய்த நாள்
04
ஜூலை
2017
12:07
தெய்வ வழிபாடு, தேவையற்ற மனச்சங்கடங்களை தீர்க்கவல்லது. மன அமைதியுடன் குறைகளை முறையிட்டு, ஆண்டவனின் அருளாசி கிடைத்தால், வாழ்க்கையே ஒளிமயமாகும் என நம்புகின்றனர். ஆனால், பக்தனின் கனவில் வந்து, கடவுளே உதவி கேட்டதாக வடசித்துார் பகுதி மக்கள் கூறுகின்றனர். சுமார், 200 ஆண்டுகளுக்கு முன் பெரும் மழை கொட்டியது. நாடே வெள்ளக்காடாக இருந்தது. இடையர்பாளையம், போகம்பட்டி வழியாக வடசித்துார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது, ஊர்க்கவுண்டரின் கனவில் தோன்றிய கடவுள், ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு என்னுடைய சிலை கரை ஒதுங்கியுள்ளது. சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபடுமாறு உத்தரவிட்டார். ஊர்மக்கள் ஒன்றுகூடி, ஆற்றங்கரைக்கு ஒதுங்கிக் கடந்த சிலையை மீட்டு, கயிறு கட்டி கரையேற்றினார்கள்.
அன்று முதல் இன்று வரை ஆற்றங்கரையில், வாழைத்தோட்டத்து அய்யன் திருத்தலம் அருகே, கிழக்கு திசையை நோக்கி ஊரின் காவல் தெய்வமாக மதுரைவீரன் குடிகொண்டுள்ளார். இரு நுாற்றாண்டு பழமையான மதுரைவீரன் கோவிலில், ஐந்தடி உயரத்தில் சிற்பக்கலையுடன் வடிவமைக்கப்பட்ட மதுரைவீரன் சிலையும், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் தெய்வங்கள் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் பூஜை, வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு அபிேஷக பூஜையும் நடக்கிறது. மதுரை வீரன் கோவில் என்றாலே கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும். ஆனால், இங்கு, ஒட்டுமொத்த ஊர் மக்களும் வழிபடும் கோவிலாக உள்ளது. குடும்பத்தில் பிரச்னை, சொத்து பிரச்னை, திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கோவில் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றால் காரியம் கைகூடும் என்ற ஐதீகம் உள்ளது. வறட்சி காலங்களில், மழை வேண்டி பிரார்த்தனை செய்தால், கட்டாயம் மழை பெய்யும் என, கிராம மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.