பதிவு செய்த நாள்
13
ஜூலை
2017
11:07
ஆர்.கே.பேட்டை: அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், வரும் திங்கட்கிழமை பிறக்கிறது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, அம்மன் கோவில்களில் வழிபாடு நடத்த பெண்கள் காத்திருக்கின்றனர். அதே நாளில், சிவாலயங்களில் பிரதோஷத்தையொட்டி, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமும் நடைபெற உள்ளது சிறப்பு. ஆடி மாதம் என்றாலே, அம்மன் கோவில்களில் பூஜைகள் களைகட்ட துவங்கிவிடும். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில், பெண் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். வேப்பிலை தோரணம், எலுமிச்சை மாலை என, கோவில்களில் பூஜை பொருட்கள் குவியும். பொங்கல் வைத்து அம்மனுக்கு படைப்பதும், குத்துவிளக்கு பூஜை நடத்துவதும் பக்தர்களின் வழக்கம். பூஜைக்கு தேவையான பூக்கள் மற்றும் எலுமிச்சம் பழங்களை சந்தைக்கு கொண்டு வரவசாயிகளும் முழுவீச்சில் பாடுபட்டு வருகின்றனர். வரும் 21ம் தேதி, முதல் வெள்ளிக்கிழமை துவங்கி, அடுத்த 10 வாரங்களுக்கு அம்மன் கோவில்களில் விழாக்கோலம் தான். தொடர்ந்து ஆவணி மாதத்தில், செவ்வாய்க்கிழமையில் அம்மன் ஜாத்திரை திருவிழாவும் நடைபெற உள்ளது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையான அடுத்த வெள்ளி அன்று மாலை, சிவாலயங்களில் பிரதோஷ அபிஷேகமும் நடத்தப்பட உள்ளது கூடுதல் சிறப்பு.