பழநி: பழநி முருகன் கோயிலில் ’இரண்டாம் ரோப்கார்’ பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோப்வே நிறுவனம் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்படுகிறது. இதில் ஒரு மணி நேரத்தில் ஆயிரம் பக்தர்கள் பயணம் செய்யலாம். பழநி மலைக் கோயிலுக்கு மூன்று நிமிடங்களில் செல்லும் வகையில் ரோப்கார் தினமும் இயக்கப்படுகிறது. இதில் எட்டு பெட்டிகளில் 29 பேர் பயணம் செய்கின்றனர். முதல் ரோப்காரின் அருகிலேயே இரண்டாம் ரோப்கார் நிறுவ இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.வெளிநாட்டு நவீன தொழில் நுட்பத்துடன் 2வது ரோப்கார் அமைப்பதற்காக, தமிழக அரசு 11 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது.புதிய ரோப்கார் அமைப்பதற்கான செலவு, அதன் கட்டமைப்புகள், பக்தர்களின் பாதுகாப்பான பயணம், நவீன தொழில்நுட்பம், நிறுவனத் தகுதிகள் போன்றவைகள் பற்றி கமிட்டியினர் ஆலோசனை செய்து உலகளாவிய டெண்டர் கோரப்பட்டது. இதில் ஆஸ்திரியா, இத்தாலி, பிரான்ஸ், கொல்கட்டா, டில்லியைச் சேர்ந்த தனியார் கம்பெனிகள் டெண்டர் கோரி இருந்தன. இறுதியாக பிரான்சை சேர்ந்த ரோப்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரான்ஸ் நாட்டு ரோப்வே நிறுவனத்தின் டெண்டரை கமிட்டி யினர் இறுதி செய்துள்ளனர். ரூ.70 கோடி மதிப்பில் ஒரு மணி நேரத்தில் ஆயிரம் பேர் மலைக்கோயிலுக்கு சென்று, கீழே வரும் வகையில் 2வது ரோப்கார் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை முடிப்பதற்கு 18 மாதங்களாகும். பிரான்ஸ் நிறுவனத்துடன் முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் பணிகள் துவக்கப்படும் என்றார்.