பதிவு செய்த நாள்
19
ஜூலை
2017
05:07
ஓசூர்: ஓசூர் காளிகாம்பா கோவிலில், 14ம் நூற்றாண்டை சேர்ந்த உறவு முறை குறித்த கல்வெட்டை, அறம் வரலாற்று ஆய்வு மைய குழு கண்டுபிடித்துள்ளது. ஓசூர், தேர்ப்பேட்டை மலை மீதுள்ள, காளிகாம்பா சமேத கமடேஸ்வரர் சுவாமி கோவிலில், அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, 14 ம் நூற்றாண்டை சேர்ந்த ஒய்சாள அரசன் வீர வல்லாளனின் உறவு முறைகள் குறித்த கல்வெட்டு மற்றும் விஜய நகர மன்னர்களின், மூன்று கன்னட கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் கூறியதாவது: ஒரே கருவறையில், காளிகாம்பாள், கமடேஸ்வரர் சுவாமி அமைய பெற்றிருப்பது மிகவும் அபூர்வம். கோவில் கருவறை சோழர் காலத்திலும், அர்த்தமண்டபம், மகா மண்டபங்கள், ஒய்சாளர் மற்றும் விஜயநகர பேரரசு காலத்திலும் கட்டப்பட்டிருக்க வேண்டும். கோவிலின் வடக்கு புறம் இருக்கும், ஒரு வரி கன்னட கல்வெட்டில், கோவிலின் பெயர் காளிகாம்பா சமேத கமடேஸ்வரர் என பதிவாகியுள்ளது. இக்கோவிலில், இரு தமிழ் கல்வெட்டுகளும், மூன்று கன்னட கல்வெட்டுகளும் உள்ளன. இதில், 14 ம் நூற்றாண்டை சேர்ந்த ஒய்சாள அரசன் வீர வல்லாளனின், செப்பு பட்டயம் குறித்த தமிழ் கல்வெட்டை மட்டும், 1974 ல் தொல்லியல்துறை பதிவு செய்துள்ளது. இதுதவிர, ஓய்சாள அரசர்களின் உறவு முறைகள் கொண்ட, மூன்று வரி கல்வெட்டு மற்றும் விஜயநகர பேரரசு கால, மூன்று கல்வெட்டுகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அதில், மருமகன், மாமன், மச்சான், மகளுக்கு பரிசாக கொடுத்த பணம் போன்ற வார்த்தைகளை காண முடிகிறது. கோவிலின் தெற்கு பக்கத்தில், ஒருவரி கன்னட கல்வெட்டும், அர்த்த மண்டபத்தின் மேல் கூறையில் ஒரு பல்லியின் சிற்பம் உள்ளது. அதன் இருபுறமும், 20 வரிகள் கொண்ட கன்னட கல்வெட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.