பதிவு செய்த நாள்
20
ஜூலை
2017
11:07
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நடைபெற உள்ள ஆடி அமாவாசை விழாவிற்காக மலைப்பாதை இன்று முதல்திறக்கப்படுகிறது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நான்கு நாள் விழாவானது 6 நாளாக உயர்த்தப்பட்டுள்ளது.சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள்(ஜூலை 21) பிரதோஷ வழிபாட்டுடன் துவங்குகிறது.
23 ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதற்காக கடந்த ஒருவாரத்திற்கு முன்பே பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மலையில் கடும் வறட்சி நிலவுகிறது. மலையில் கோயில் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட ஒரு கிணற்றில் மட்டும் சிறிதளவு நீர் உள்ளது. இதனால் பக்தர்கள் குடிப்பதற்கும், முடிகாணிக்கை, நேர்த்திக்கடன் செலுத்த, கழிப்பறை பயன்பாட்டிற்கும் நீர் இல்லை. இந்நிலையில் பக்தர்கள் மலைக்கு சென்றால் மிகவும் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும் எனக்கருதி அதிகாரிகள் 10நாள் விழாவை 4 நாளாக குறைத்தனர். வலியுறுத்தல்இதற்கு பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி கிளம்பியது. பல லட்சம் பக்தர்கள் 4 நாட்களில் மலையை முற்றுகையிட்டால் மலையில் பெரும் நெரிசலும், உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பதால் வழக்கம்போல் 10 நாட்களாவது அனுமதிக்க வேண்டும் என அரசை வலியுறுத்தினர்.
பக்தர்கள் முதல்வர், விருதுநகர், மதுரை கலெக்டர்களுக்கு புகார் அளித்தனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் நடந்த இரு மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள், வனத்துறையினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில், 4 நாட்களாக அனுமதிக்கப்பட்ட விழா 6 நாட்களாக உயர்த்தப்பட்டது. அதன் படி நாளை திறப்பதாக இருந்த மலைப்பாதை, இன்று காலை முதல் திறக்கப்படுகிறது. அதிகாரிகள் விளக்கம்மலை கோயில் அதிகாரிகள் கூறியதாவது: குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலையை கருதி பக்தர்கள் நலனுக்காகவே மலைப்பாதை திறக்கப்படும் நாட்கள் குறைக்கப்பட்டது. தற்போது தொண்டு நிறுவனங்கள் மூலம் குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக இரு நாட்கள் மலைப்பாதையை திறக்க மதுரை ,விருதுநகர் கலெக்டர்கள் அனுமதி வழங்கி உள்ளனர். சூடம் ஏற்றுவது ஏற்கனவே அனைத்து கோயில்களிலும் தடை உள்ளது. இக்கோயிலுக்கும் அது ஏற்கனவே நடைமுறைக்கு வந்து விட்டது என்றாலும், பக்தர்கள் வழிப்பாதையில் உள்ள லிங்கவடிவிலான கற்களுக்கு முன் சூடம் ஏற்றி வழிபட்டுக்கொண்டே மலையேறுகின்றனர்.
பக்தர்கள் ஏற்றும் சூடம் காற்றில் காய்ந்த செடிகளின்மீது பட்டுவிட்டால் காட்டுத்தீ பற்றுவதற்கான அபாயம் உள்ளது. இதை மதஉணர்வோடு பக்தர்கள் அணுக வேண்டாம். சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வழக்கமாக மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் தற்போது மலையில் உள்ள வறட்சி நிலையை கருதி பக்தர்கள் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர். அதே நேரம் கொண்டு செல்லும் பாட்டில்களை இறங்கும் போது கொண்டு வரவேண்டும், என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.