பதிவு செய்த நாள்
20
ஜூலை
2017
01:07
ஆர்.கே.பேட்டை : தை மாதம், பொங்கல் திருவிழாவிற்கு பின், தற்போது ஆடியில் மீண்டும் கோவில் திருவிழாக்கள் களைகட்டியுள்ளன. ஆறு மாதங்களுக்கு பின், பக்தர்கள் மீண்டும் தங்களின் பக்தியை முழுவீச்சில் வெளிபடுத்தி வருகின்றனர். பொங்கல் திருநாளாம் தை மாதம் முதல் தேதியில், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து கொண்டாடும் பக்தர்களின் வழிபாடு, தொடர்ந்து தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம் என, தொடர்ந்து வருகிறது.
ஆறு மாதங்களுக்கு பின், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் விழாக்கள் கோலாகலமாக புத்துணர்வுடன் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பக்தர்கள் தை மாதத்திலும், அதை தொடர்ந்து ஆடி மாதத்திலும், குல தெய்வ வழிபாடு செய்வதும் வழக்கத்தில் உள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை குலதெய்வ கோவில்களுக்கு குடும்பத்தினருடன் சென்று சிறப்பு வழிபாடு செய்கின்றனர். தங்களின் பக்தியை மிக சிறப்பாக வெளிப்படுத்த ஆடி மாதம் ஆண்டின் இரண்டாவது வாய்ப்பாக அமைகிறது. ஆடியை தொடர்ந்து, ஆவணியில் ஜாத்திரை திருவிழா மற்றும் விநாயகர் சதுர்த்தியும், புரட்டாசியில் பெருமாள் வழிபாடு என, தை மாதம் வரை திருவிழாக்கள் மீண்டும் களைகட்ட துவங்கி விடும்.