பதிவு செய்த நாள்
24
ஜூலை
2017
12:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாகாளேஸ்வரர் கோவிலில், 27ம் தேதி, ராகு, கேது பெயர்ச்சி, பரிகார லட்சார்ச்சனை நடைபெறுகிறது.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலின், மேற்கு ராஜ கோபுரத்தின் பின்புறம், பழமை வாய்ந்த மாகாளேஸ்வரர் கோவில் உள்ளது.இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மாகாளேஸ்வரரை, காளஹஸ்தியில் வசித்து வந்த மாகாளன் என்ற பாம்பரசன், சிவபெருமான் இட்ட சாபத்தை போக்கிக் கொள்ள, தரிசித்து, பாப விமோசனம் பெற்றதாக காஞ்சி புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இக்கோவிலின் கர்ப்ப கிரகத்தில், ராகு, கேது, சிவபெருமானுடன் உள்ள திருக்கோல காட்சி அமைந்துள்ளது.இக்கோவிலில், பக்தர்களின் குறை நிவர்த்திக்காக, ஒன்பது கிரகங்கள்(நவக்கிரகம்) தனித்தனி சன்னதிகளில், தம்பதிசமேதராய் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். மேலும், இக்கோவிலில், ராகு, கேது பகவானுக்கு தனித்தனி சன்னதி அமைந்துள்ளதால், ராகு, கேது பெயர்ச்சியின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள், கிரகதோஷ பரிகார நிவர்த்திக்காகவந்து, வழிபட்டுசெல்கின்றனர். வரும், 27ம் தேதி, பகல், 12:48 மணிக்கு, ராகு பகவான், சிம்ம ராசியிலிருந்து, கடகராசிக்கும், கேது பகவான், கும்ப ராசியிலிருந்து, மகர ராசிக்கும் இடப்பெயர்ச்சியாவதை முன்னிட்டு, அன்று, காலை முதல், சிறப்பு பரிகார ஹோமங்களும்,லட்சார்ச்சனையும் நடைபெற உள்ளது.