பதிவு செய்த நாள்
24
நவ
2011
12:11
ஊட்டி:ஊட்டி அருகேவுள்ள முத்தநாடுமந்தில் தோடரின மக்களின், "வில் - அம்பு குல நிர்ணய விழா நடந்தது.நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே வாழும் தோடரின ஆதிவாசி மக்கள், தங்களின் தெய்வீக வழிபாடுகள், இல்லறம், வளைகாப்பு, விளையாட்டு, உடை ஆகியவற்றில் தனித்துவமான முறைகளை பின்பற்றி வருகின்றனர். இதில், இவர்களின் வளைகாப்பு நிகழ்ச்சியை மிகவும் ஆடம்பரமாக, வித்தியாசமான முறையில் கொண்டாடுகின்றனர். இதை இவர்கள், "வில் - அம்பு குல நிர்ணய விழா என்று, அழைக்கின்றனர். ஊட்டி அருகேவுள்ள முத்தநாடுமந்தில் இவ்விழா நேற்று நடந்தது. தோடரின பெரியவர்கள் முன்னிலையில், தோடரின ஆதிவாசி உதயன் நேஷ்தே மற்றும் டயானாவிற்கு, "வில் - அம்பு குல நிர்ணய விழா நிகழ்ச்சி நடந்தது.இதன்பின், அவர்களின் பாரம்பரிய பாடல்களை பாடி, விருந்துடன் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இது குறித்து, தோடரின ஆதிவாசி மோகன் கூறுகையில், ""தோடரின வழக்கப்படி, எங்களின் திருமணம் என்பது வரதட்சணை இல்லாமல், பெரியவர்கள் பேசிய பின் மிகவும் எளிமையாக முடியும். அதன்பின், பெண் கர்ப்பமான பிறகு வளைகாப்பு நிகழ்ச்சி என்பது மிகவும் ஆடம்பரமான நிகழ்வாக கொண்டாடப்படும். இதை நாங்கள் "வில் - அம்பு குல நிர்ணய விழா என்று அழைப்போம், என்றார்.