இறைவா! என்னைச் சொர்க்கத்துக்கு கூட்டிச் செல்லேன் என்று சப்தம் போடுவதால் மட்டும் சொர்க்கம் கிடைத்து விடாது. வாழும் காலத்தில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே சொர்க்கம் அமையும். நமக்கு எவ்வளவோ பொருள் கிடைக்கிறது. மூன்று வேளை உணவு கிடைக்கிறது. இதற்கெல்லாம் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்று நம்மில் பலரிடம் அந்த பழக்கமே இல்லை. நான் சுயமாகச் சம்பாதித்து வாங்கிய பொருள் இது என்று ஆணவமாகப் பேசுகிறார்கள்.
நமக்கு உழைக்கும் சக்தியை கொடுத்தது, புத்திசாலித்தனத்தைக் கொடுத்தது இறைவன் என்பதை உணர வேண்டும். நல்லது நடக்கும் நேரத்தில் இறைவனை நினைக்காதவர்கள் கெட்டது நடந்து விட்டால் உடனே நினைக்கிறார்கள். இப்படி ஒரு துன்பத்தை தந்து விட்டாயே என கதறுகிறார்கள். உண்மையில் அவனிடம் என்ன கேட்க வேண்டும் தெரியுமா? இறைவா! நான் என்ன பாவம் செய்திருந்தாலும் அதை மன்னித்து விடு. இப்பாவச் செயலை மட்டுமல்ல, எந்த பாவத்தையும் இனி செய்ய மாட்டேன் என உருக்கமாகச் சொல்ல வேண்டும். துன்பத்தை இறைவன் கொடுத்த பரிசாக எண்ணி பொறுமை காக்க வேண்டும்.
இறைவன் எதையாவது கொடுத்த சமயம் நன்றி செலுத்துபவர், அவன் சோதிக்கும் போது பொறுமை கொள்பவர், துன்பம் வரும்போது பாவ மன்னிப்பைத்தேடுபவர் தாங்கள் விரும்பியபடி எந்த வழியாகவும் சொர்க்கம் நுழைவர், என்கிறார் நபிகள் நாயகம். மோசடி செய்பவர்கள், கஞ்சர்கள், கொடுத்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுபவர்கள், மது அருந்துவோர், வட்டி வாங்கி சாப்பிடுவோர், அனாதை சொத்தைசாப்பிடுபவர், பெற்றோருக்கு எதிராக நடந்தவர் ஆகிய ஏழு வகையினரும் சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது என்கிறது இஸ்லாம்.