சிங்கம்புணரி: சிங்கம்புணரி கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. மழை வேண்டி இங்குள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் சிறப்பு யாகம் செய்ய கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து யாகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் முதல் நாள் ஜூலை 29 ம் தேதி ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் நேற்று ஜூலை 30 ம் தேதி காலை 9:00 மணிக்கு யாகம் நடத்தப்பட்டது. 108 சங்குகளைக் கொண்டும், கும்பங்கள் வைத்தும் சிறப்பு பூஜைகள் நடந்தன. வருணபகவான் மூலமந்திரம் ஓதப்பட்டது. கோயில் சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தினர். இதையொட்டி சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 12:00 மணிக்கு யாகம் முடிவடைந்த நிலையில் மீண்டும் மதியம் 3:00 மணிக்கு இப்பகுதியில் மழை பெய்தது.