பதிவு செய்த நாள்
01
ஆக
2017
12:08
பெங்களூரு: ஆடி மாதத்தின் மூன்றாம் வெள்ளியன்று, வர மஹாலட்சுமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக, இப்போதிருந்தே பெண்கள் தயாராகி வருகின்றனர். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், எந்த விஷயத்துக்கும் நேரம் கிடைப்பதில்லை. அனைவரும் ஒன்றாக வீட்டில் நேரத்தை செலவிடுவது கஷ்டம். பண்டிகை காலங்களில் தான், வீட்டில் அனைவரும் ஓய்வாக இருப்பது வழக்கம். இதற்காகவே, பலரும் உற்சாகத்துடன் பண்டிகையை வரவேற்பர். இம்மாதம், 4ம் தேதியன்று, ஆடி மூன்றாம் வெள்ளி வருகிறது. அன்றைய தினம் வர மஹாலட்சுமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக, பெண்கள், தயாராகி வருகின்றனர்.
பண்டிகை நாளில், பூ, பழங்கள் விலை அதிகம் இருக்கும் என்பதால், முன் கூட்டியே, தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். வர மஹாலட்சுமி பண்டிகை கொண்டாடும் பலரும், புகைப்படம் எடுத்து, பேஸ் புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றி, மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர். வேலை நிமித்தமாக, சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு சென்றிருப்பவர்கள், இப்பண்டிகைக்காக காத்திருக்கின்றனர். இது போன்ற நேரத்தில் தான், அவர்கள், தங்கள் வீடுகளுக்கு வந்து, சொந்த, பந்தங்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும். வர மஹாலட்சுமி விரதம் கடைபிடிக்க வேண்டுமென, பெண்களுக்கு ஆசை இருந்தாலும், அதை எவ்வாறு கடைபிடிப்பது என்பதை அறியாதவர்கள் இன்னமும் உள்ளனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், பெங்களூரை சேர்ந்த மமதா, சூடாமணி ஆகிய இரு பெண்கள், யு டியூப் மூலம் ஆலோசனை கூறுகின்றனர். பண்டிகையின் போது, லட்சுமி விக்ரஹத்துக்கு, எவ்வாறு சேலை அணிவிப்பது, அலங்காரம் செய்வது பற்றி, வீடியோ மூலம் இவர்கள் கற்று தருவர். லட்சுமியாக கருதி, வைக்கப்படும் தேங்காய் கலசத்துக்கு, எப்படி சேலை அணிவது, அலங்காரம் செய்வது என்பதை, இந்த வீடியோவை பார்த்து, தெரிந்து கொள்ளலாம். இதை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்,
https://www.youtube.com/watch?v=D2E45jhf0Hs என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.