பதிவு செய்த நாள்
01
ஆக
2017
12:08
உத்திரமேரூர்: எடமச்சி, ஆலடியம்மன் கோவிலில், ஆடி மாத திருவிழா கோலாகலமாக நடந்தது. சாலவாக்கம் அடுத்த, எடமச்சி கிராமத்தில், ஆலடியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஆண்டுதோறும், ஆடி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம்.அதன் படி, இந்தாண்டிற்கான விழா, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன், கடந்த செவ்வாய்கிழமை துவங்கியது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மாரியம்மன், கங்கையம்மன் கோவில்களுக்கு, அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றன. இரவு, 7:00 மணிக்கு, விரதமிருந்த பக்தர்கள் அப்பகுதி குளக்கரையில் இருந்து, ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்து, கோவில் வளாகத்தில் மூட்டப்பட்டிருந்த தீ குண்டத்தில் தீ மிதித்து, அம்மனை வழிபட்டனர். இரவு, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஆலடியம்மன் வீதியுலா நடந்தது. இதில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.