உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் ரூ.3 கோடியில் ராஜகோபுரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2011 11:11
திசையன்விளை:உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் ரூ.3 கோடி செலவில் ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது.தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று திசையன்விளை அருகேயுள்ள உவரியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்புலிங்க சுவாமி கோயிலாகும். இங்கு நடைபெறும் வைகாசி விசாகம் மற்றும் விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இக்கோயிலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கொடிமரம் நிறுவப்பட்டது. தற்போது முதன்முறையாக தேர் திருவிழா நடைபெறவுள்ளது.இதற்காக ரூ.1.50 கோடி செலவில் தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. முதலாவது தேர் திருவிழா வரும் ஜனவரி மாதம் 30ம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு ஸ்ரீபலிநாதர் உற்சவம், விநாயகர் சப்பரத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதி உலா, இரவு 7 மணிக்கு சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி காலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேர் நிலைக்கு வந்த பிறகு தீர்த்தவாரி நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுதருளி வீதியுலா வருகின்றனர். விழா நாட்களில் தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவுகள் நடக்கின்றன. இந்த கோயில் முன்பு ரூ.3 கோடி செலவில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் 90 அடி உயரத்தில், 41 அடி அகலத்தில், 29 அடி நீளத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்படவுள்ளது. இதில் முதல் 30 அடி உயரம் கருங்கற்களால் கட்டப்படவுள்ளது. இந்த ராஜகோபுரத்தின் மாதிரி வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதிவிரைவில் திருப்பணிகள் தொடங்கப்படவுள்ளன. இத்தகவலை உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.