பதிவு செய்த நாள்
02
ஆக
2017
11:08
சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் குளத்தில் சிறு மழைக்கே தண்ணீர் தேங்குகிறது. இதனால், அங்கு பறவைகளின் வரத்தும் அதிகரித்து வருகிறது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் குளம் 12 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் நீளம் 190 மீட்டர், அகலம் 143 மீட்டர், 5 மீட்டர் ஆழம் கொண்டது. இக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள மண்டபத்தின் சதுரம், 24 மீட்டர். இக்கோவில் குளம் பல ஆண்டுகளுக்கு முன் படித்துறை சிதைந்து, பராமரிப்பின்றி காணப்பட்டது. அப்போது, குளத்தை மூடி பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு, பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின் குளத்தைச் சுற்றி படித்துறை அமைக்க திட்டமிட்டு, பணிகள் துவக்கப்பட்டன. குளத்திற்கான திருப்பணிகள், 13 ஆண்டுகள் நடந்தாலும், மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டன.
மழை பொய்த்த ஆண்டுகளில் குளம் வறண்டுபோய், சிறார்களின் விளையாட்டு மைதானமாக மாறியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், இந்த குளத்திற்கு விமோசனம் பிறந்தது. அக்குளத்தை துார்வாரி தண்ணீர் தேங்க களிமண் அடுக்கு அமைக்கப்பட்டது. மேலும், வீராணம் திட்டத்தின் மூலம் ஐந்து ஆண்டுகள் தண்ணீர் நிரப்பப்பட்டது. இதன் காரணமாக சுற்று வட்டார பகுதியின் நிலத்தடி நீர் உயர்ந்தது. குளத்தைச் சுற்றி நந்தவனமும் சீர்பட துவங்கின.அடுத்து, ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. அதன் பின் தெப்ப திருவிழாவின் போது மட்டும் தண்ணீர் கொட்டப்பட்டது. பின், நான்கு மாடவீதிகளில் சேகரமாகும் மழைநீர், குளத்தில் வந்துசேரும் வகையில் மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றப்பட்டது.
அதன் பின், குளத்தில் பறவைகள் இரவு நேரத்தில் தங்க தொடங்கின. வாத்து, ஆமை, புற, என நிரந்தரமாக அங்கு தங்கும் பறவைகளுடன் மீன்களும் உள்ளன. கடந்த, இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு பறவைகளின் வரவும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் கடும் வறட்சி மற்றும் வெப்பத்தின் காரணமாக நீர் இன்றி வறண்டு போக ஆரம்பித்தது. இதனால், அங்கிருந்த பறவைகள் பரிதவித்து வந்தன. இதையடுத்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில் குளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. படிகளின் வெடிப்புகள், மழைநீர் வடிகால் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டன. குளத்தில் மூன்று ஆழ்துளை கிணறுகள் அமைத்து, களிமண் வரண்டு போகாமல் தடுக்கப்பட்டது. அதன் பலனாக சமீபத்தில் பெய்த மழைக்கு குளத்தில் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்க ஆரம்பித்தது. இதையடுத்து, வெளிநாட்டு பறவைகளின் வரத்தும் அதிகரித்துள்ளது.