பதிவு செய்த நாள்
02
ஆக
2017
11:08
நாமக்கல்: நாமக்கல் அருகே, வராகி அம்மன் கோவில் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. நாமக்கல், எம்.ஜி.ஆர்., நகர் செம்பாளிகரடு பகுதியில் வராகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா, ஜூலை, 24ல் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 28ல் திருவிளக்கு பூஜை, நேற்று முன்தினம் வடிசோறு மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று, பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின், தீமிதி விழா நடந்தது. ஆண்களும், பெண்களும் தீக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.