பதிவு செய்த நாள்
07
ஆக
2017
02:08
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நேற்று மாலையில் ஆடித்தபசு விழா நடந்தது. இக்கோயிலில் ஆடித்தபசு விழா ஜூலை 27ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கோமதி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனைகள் நடந்தன. இரவில் வீதியுலா நடந்தது. 9ம் திருநாளான ஆக.,௪ம் தேதி தேரோட்டம் நடந்தது.இரவில் அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு சுவாமி, அம்பாள், சந்திரமவுலீஸ்வரர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு கும்பஅபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 11:45 மணிக்கு, தங்கச் சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி, தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு வந்தார். அங்கு அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:40 மணிக்கு சங்கரலிங்கவாமி தெற்கு ரதவீதியில் ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் தபசு காட்சி நிகழ்வு நடந்தது. அமைச்சர் ராஜலட்சுமி, எஸ்.பி., அருண்சக்திகுமார் பங்கேற்றனர். இரவு 11 மணிக்கு மேல் யானை வாகனத்தில் சங்கரலிங்கசுவாமியாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.