என்னை என் அடியான் (பக்தன்) நினைவு கூரும்போதும், என் நினைவில் அவனது உதடுகள் இரண்டும் அசையும் போதும் நான் அவனுடன் இருக்கின்றேன் என அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் சொல்கிறார். இதன் விளக்கத்தைக் கேளுங்கள். அவனுடன் இருக்கின்றேன் என்பதற்கு அல்லாஹ் அந்த அடியானைத் தன் பாதுகாப்பில் கண்காணிப்பில் வைத்துக் கொள்கிறான் என்று பொருள். இறைவனை நினைவு வைக்கும் மனிதன் உயிருள்ள ஒரு மனிதனுக்கு ஒப்பாவான். அவனை நினைவு வைக்காதவன், பிணத்திற்கு ஒப்பாவான் என்று நாயகம் கூறுகிறார். இறைவனின் நினைவு உள்ளத்திற்கு உயிரூட்டுகிறது. அது குறித்து அலட்சியமாய் இருப்பது அவனது உள்ளத்தை மரணிக்கச் செய்து விடுகிறது. இந்த மனித வடிவத்தின் (உடலின்) வாழ்க்கை உணவைக் கொண்டே அமைந்துள்ளது. உணவு கிடைக்காவிட்டால் இந்த உடல் இறந்து விடுகிறது. அதுபோல உடலுக்குள் இருக்கும் ஆன்மாவுக்கு இறை தியானம் என்னும் உணவு கிடைக்காமல் போய்விட்டால் அதற்கும் மரணமேற்பட்டு விடுகிறது. எனவே எப்போதும் இறைவனின் நினைவுடன் இருங்கள். நல்வாழ்வைப் பெறுங்கள்.