உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் முகப்பு மண்டபம் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2017 12:08
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் முகப்பில் கட்டப்பட்டு வரும் மண்டப பணி முடியும் தருவாயில் உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளிபடும் நிலையில் கருவறை அமைந்துள்ளதால் இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த சதுர்த்தி விழாவின் போது சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. வட மாநிலங்களில் மட்டுமே விநாயகருக்கு திருமணம் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் இரு தேவியருடன் இந்த விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவதால் இந்த விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கோயில் முகப்பு மற்றும் பக்கவாட்டில் ஓட்டு கொட்டகையால் தாழ்வாரம் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தாழ்வாரங்களும் சேதமடைந்திருந்நதால் பக்தர்கள் கடும் சிரமமடைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து ஓட்டு கொட்டகை தாழ்வாரங்களை அகற்றி விட்டு முகப்பு மற்றும் பக்கவாட்டில் கான்கிரீட் மண்டபம் அமைக்கும் பணியை கோயில் கமிட்டியினர் துவங்கினர். தற்போது முகப்பு மண்டபம் கான்கிரீட் போடப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இதனால் பக்தர்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.