பதிவு செய்த நாள்
12
ஆக
2017
02:08
குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில், ரத்தினகிரீஸ்வர் உடனுறை சுரும்பார்குழலி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவில் குடிபாட்டுக்காரர்கள், தமிழகத்தில் திருப்பூர், சேலம், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ளனர். சித்திரை திருவிழா, தேரோட்டம் மற்றும் கார்த்திகை மாத சோமவார நாட்களில், இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த தி.மு.க., ஆட்சியின்போதே, ரோப்கார் அமைக்க, கோவில் குடிபாட்டுக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போதைய அரசு, மக்கள் பங்களிப்பு இருந்தால், ரோப்கார் அமைக்கப்படும் என, உத்தரவாதம் அளித்தது. கோவில் குடிபாட்டுக்காரர்கள் முயற்சியால்,
ரூ. 3.50 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்க முடிவு செய்யப்பட்டது. நான்கு பேர் செல்லும் வகையில் ரோப்கார் அமைக்க அனுமதி பெறப்பட்டது. இதில், மக்கள் பங்களிப்பாக, 2.40 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த தி.மு.க., ஆட்சியில், பூமிபூஜை செய்யப்பட்டது. ஆனால், தொடர்ந்து வந்த அ.தி.மு.க., ஆட்சியில், ரோப்கார்பணி கிடப்பில் போடப்பட்டது. பொதுமக்கள், கோவில் குடிபாட்டுக்காரர்கள் முயற்சியால், கடந்த பிப்., 9ல், ரோப்கார் திட்டத்துக்கு, 6.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மீண்டும் ரோப்கார் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் மக்கள் பங்களிப்பாக, 3.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, 12 பேர் அமர்ந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகியும், பணி தொடங்காமல் தொய்வடைந்துள்ளதாக, மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, ரத்தினகிரீஸ்வர் கோவில் இ.ஓ., ஜெயகுமாரிடம் கேட்டபோது, ரோப்கார் பணி தொடர்ந்து நடக்கிறது. திட்டமிட்டப்படி, 18 மாதத்தில் பணி முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என்றார்.
அய்யர்மலை மலைக்கோவில், சிறப்பு வாய்ந்த கோவில். ரோப்கார் வசதி வந்தால், என்னைப்போல் பாதிக்கப்பட்ட மக்கள், மலை ஏறி சுவாமி கும்பிட முடியும். மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
- ஆர்.பிரேம்குமார், கண்டியூர்.
மக்கள் பங்களிப்புடன், 12 பேர் செல்லும் வகையில், நான்கு மாதங்களுக்கு முன், பணி தொடங்கப்பட்டது. பணி, 18 மாதத்தில் நிறைவு பெற்று, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என, திட்டஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான்கு மாதம் ஆகியும் பணி துவங்கவில்லை. பணியை விரைந்து முடிக்கவேண்டும்.
- எம். எதுமலை, அய்யர்மலை ஆன்மிக அறக்கட்டளை தலைவர், குளித்தலை.
குடிப்பாட்டுக்கார்கள், பக்தர்கள் முயற்சியால் ரோப்கார் திட்டம் தமிழகத்தில் பழனி முருகன் கோவில் அடுத்து, அய்யர்மலை சிவன் கோவிலுக்கு வந்தது. இப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் இப்பணி அமைந்துள்ளது. பணியை திட்டமிட்டபடி, 18 மாதத்தில் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும்.
- கே.ஜெயபால், தாளியாம்பட்டி.
என்னைப்போல் அதிக உடல் பருமன் உள்ளவர்கள், 1,017 படி ஏறி சுவாமி கும்பிட முடியாது. ரோப்கார் வசதி ஏற்படுத்தினால், குழந்தைகள், முதியோர், அதிக உடல் பருமன் உள்ளவர்கள் பயன் பெறுவார்கள். இந்து சமய அறநிலையத்துறை நேரடி கண்காணிப்பில் பணியை விரைந்து முடிக்கவேண்டும்.
- ஆ.சந்தானலட்சுமி, குளித்தலை.