குஜராத்தில் உள்ள துவாரகை, கடலிலுள்ள ஒரு தீவாகும். இந்த ஊரை கடலுக்குள் நிர்மாணித்தவர் கண்ணபிரான். கம்சனுக்கு பெண் கொடுத்த மாமனார் ஜராசந்தன். கண்ணன் தன் மருமகனை கொன்று விட்டான் என தெரிந்ததும் அவர் மீது பகை கொண்டான். கண்ணனை அழிப்பதற்காக தன் படைகளை கிருஷ்ணர் தங்கியிருந்த மதுராபுரிக்கு அனுப்பினான். ஆனால் அவர்களால் கண்ணனைப் பிடிக்க முடியவில்லை. விடாக்கண்டனான ஜராசந்தனோ ஒருமுறை இரு முறை அல்ல... 18 முறை கண்ணன் மீது போர் தொடுத்தான். அவர்களது படையெடுப்பால் கண்ணனுக்கு எந்த பாதிப்பும் வராவிட்டாலும், யாதவ மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எனவே அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு மேற்குக்கடலில் இருந்த ஒரு தீவுக்கு கண்ணன் அவர்களை அழைத்துச் சென்றான். அந்த தீவிலேயே ஒரு அழகிய நகரத்தை உருவாக்கினான். அதுவே துவாரகை என பெயர் பெற்றது. இங்கு கிருஷ்ணர் கோயில் உள்ளது.