பதிவு செய்த நாள்
29
நவ
2011
11:11
செஞ்சி : இஞ்சிமேடு கல்யாண வரத அனுமனுக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் கல்யாண வரத அனுமனுக்கு நேற்று முன்தினம் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள், கல்யாண லட்சுமி நரசிம்மர், ராமர், சீதை, லட்சுமணருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். பகல் 10 மணிக்கு இஞ்சிமேடு பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் சிறப்பு ஹோமம் செய்தனர். இதில் உலக அமைதிக்காக தன்வந்திரி, சுதர்சன, ஆஞ்சநேய, நரசிம்ம, கருட பூஜையும், ஒரு லட்சம் மந்திரங்களும் படிக்கப்பட்டன. ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீரை கொண்டு கல்யாண வரத அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். ஹோமத்தை முன்னிட்டு மூலவர் வரதராஜர், பெருந்தேவி தாயாருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.