திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீப திருவிழாவில் ஸ்வாமி வீதி உலாவுக்கு பயன்படுத்தப்படும் திருக்குடைகள் மற்றும் கண்ணாடி ரிஷப வாகன வெள்ளோட்டம் நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று (நவ., 29) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து நடக்கும் பத்து நாட்கள் திருவிழாவில் ஸ்வாமி வீதி உலா காலை மற்றும் இரவும் நடக்கிறது. வீதி உலாவின் போது ஸ்வாமி வாகனங்களில் அலங்கரிக்கப்படும்போது பயன்படுத்தப்படும், 11 குடைகள், 5 லட்ச ரூபாயில் புதியதாக தயார் செய்யப்பட்டு திருக்குடைகள் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருக்குடைகளை சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அருணாசலேஸ்வரா ஆன்மிக அறக்கட்டளை சார்பில் நன்கொடையாக கோவில் நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டன. மேலும் கடந்த 1975ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு தீப திருவிழாவில் ஐந்து நாள் திருவிழாவில் பகல் நேரத்தில் ஸ்வாமி வீதி உலா வரும்போது பயன்படுத்தப்படும் கண்ணாடி ரிஷப வாகனம் பழுதடைந்ததால், தற்போது ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அவை புதுப்பிக்கப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் அலங்கார மண்டபத்தின் அருகே சிறப்பு பூஜைகள் செய்து வெள்ளோட்டமாக எடுத்து செல்லப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.