மூணாறு: மூணாறில் சிறுமலர் பெண்கள் உயர் நிலை பள்ளியில் ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில் ‘அத்தப் பூ’ கோலமிடப்பட்டு, ‘ஓண சத்ய’ எனும் விருந்தோம்பல் நிகழ்ச்சி நடந்தது.
கேரளாவில் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ‘ஓணம்’ வரும் செப்., 4ல் கொண்டாடப்படுகின்றது. இந்த பண்டிகை கேரளாவில் நல்லாட்சி செய்த மாவேலி மன்னனை வரவேற்கும் வகையில் மக்கள் கொண்டாடுகின்றனர். ‘அத்தம் முதல் பத்து நாட்கள் ஆடி மகிழ்வோம்’ என்பதை எடுத்து காட்டும் வகையில், ‘மலையாளத்தில் சிங்கம் மாதத்தில்( ஆவணி) ‘அத்தம்’ நட்சத்திரத்தில் பண்டிகை தொடங்கி பத்தாம் நாளான ஓணத்தின்போது நிறைவு பெறும். அதன்படி கடந்த ஆக.,25ல் பண்டிகை தொடங்கியது. பத்து நாட்களும் வீடுகளுக்கு முன்பு பல்வேறு வண்ண மலர்களால் ‘அத்தப் பூ’ கோலமிடுவது வழக்கம்.
இது தவிர பள்ளி,கல்லுாரி, அலுவலகங்கள் ஆகியவற்றிலும் ஓணப் பண்டிகையை வரவேற்கும் வகையில் அத்தப் பூ கோலமிட்டு கொண்டாடுவார்கள். ஓணப் பண்டிகையின்போது பரிமாறப்படும் ‘ஓண சத்ய’ எனும் விருந்து மிகவும் பிரபலமாகும். இந்நிலையில் மூணாறில் ஓணப் பண்டிகையை வரவேற்பதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். இங்கு ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் சார்பில் ஓணம் கொண்டாடப்பட்டது.அதேபோல் மூணாறில் உள்ள சிறுமலர் பெண்கள் உயர் நிலை பள்ளியில் நேற்று ‘அத்தப் பூ’ கோலமிட்டு ஓணம் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி ‘ஓண சத்யா’ எனும் விருந்தோம்பலும் நடந்தது. அதில் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி உள்ளூர் பிரமுகர்கள், வர்த்தக சங்கம் உள்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.